குமரி கனமழை: பேச்சிப்பாறை அணையில் இருந்து 2,200 கனஅடி நீர் வெளியேற்றம்; மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2,200 கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மலையோர பகுதி உட்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த தட்பவெப்பம் நிலவி வருகிறது. அத்துடன் அணைகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதிகபட்சமாக இன்று மயிலாடியில் 103 மிமீ., மழை பெய்தது. ஆனைக்கிடங்கில் 83 மிமீ., கொட்டாரத்தில் 74, நாகர்கோவில் 69, பாலமோரில் 82, பூதப்பாண்டியில் 50, தக்கலையில் 79, அடையாமடையில் 52, மாம்பழத்துறையாறில் 85, சிற்றாறு ஒன்றில் 50, சிவலோகத்தில் 51, களியலில் 54, பேச்சிப்பாறையில் 51, பெருஞ்சாணியில் 68, புத்தன்அணையில் 65, சுருளோட்டில் 64, முள்ளங்கினாவிளையில் 63 மிமீ., மழை பதிவானது.

கனமழையால் குமரி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மட்டுமே மழைக்கு 14 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.9 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 2,343 கனஅடி நீர் உள்வரத்தாக வருகிறது. அணையில் இருந்து 636 கனஅடி நீர் மதகு வழியாகவும், 1,600 கனஅடிக்கு மேல் உபரியாகவும் என மொத்தம் 2,200 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் புத்தன் அணை, திற்பரப்பு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சுசீந்திரம்-தேரூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் உற்சாகமாக குளியலிட்டு மகிழும் சிறுவர்கள்.

இதேபோல் பழையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் சுசீந்திரம் பகுதியில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தடிக்காரன்கோணம்-கீரிப்பாறை சாலையில் காமராஜபுரம் பகுதியில் சாலையோரம் நின்ற பழமையான ஆலமரம், மாமரம் ஆகியவை மழையால் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பபட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் மலையோர கிராமங்கள் மற்றும் சாலையோரங்களில் நின்ற மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் பல இடங்களில் சிறுவர், சிறுமியர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

இதனிடையே, குமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் கடலுக்குச் செல்லவில்லை. தொடர் மழையால் ரப்பர் பால்வெட்டுதல் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுள்ளது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியது. திற்பரப்பு அருவியில் இன்று 7-வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மைனஸ் அளவாக குறைந்த முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று 10 அடியாக உயர்ந்துள்ளது. மாவட்டத்திலுள்ள் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுப்பணித்துறை பொறியாளர் குழுவினர் அணைகளில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE