இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த  3 மாதங்களில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: நாராயணசாமி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “2024 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என கூறியுள்ளோம். அதன்படி இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த மூன்று மாதங்களில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் நரேந்திரமோடி தரம்தாழ்ந்து பேசும் நிலையை இந்த மக்களவைத் தேர்தலில் அவரது பரப்புரையில் நாம் பார்க்கின்றோம். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இஸ்லாமியர்களை, தீவிரவாதத்தை ஆதரிக்கின்ற கட்சி என்றும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மக்கள் மத்தியில் செய்து வருகிறார் மோடி.

அவர் மனநலம் பாதித்தவர்போல, நான் சாதாரன மனிதனல்ல, நான் ஒரு அவதாரப்புருஷன் என்று பேச ஆரம்பித்துள்ளார். இப்படி பிரதமர் முன்னுக்குப்பின் உளறுவதிலிருந்து பாஜக படுதோல்வி அடையும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இண்டியா கூட்டணி 6 கட்ட தேர்தலில் மிகப்பெரிய எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்றும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் வாய்ப்பு இண்டியா கூட்டணிக்கு இருக்கிறது. ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் மோடி, ‘நாங்கள் 400 இடங்களை பெறுவோம்’ என்று பொய்யான தகவலை பரப்புகிறார், அது எடுபடாது.

பாஜக அதன் கூட்டணி கட்சிகள் 200 இடங்களைத் தாண்டாது. இண்டியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வென்று பெரும்பான்மைப் பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். புதுச்சேரியிலும் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெறுவார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகின்றார். ஏற்கெனவே அதிகார மீறல், ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் அவரை சாடியபோதிலும் அவர் திருந்தவில்லை.

தமிழக முதல்வர் தலைமையிலான அரசுக்கு தொல்லை கொடுப்பதும், கோப்புகளைத் திருப்பி அனுப்புவதுமாக ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவது தமிழக மக்களுக்குத் தெரியும். இந்த சூழ்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் இண்டியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை. அதிமுகவும் படுதோல்வி அடையும். ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடி உள்ளார். அது தவறில்லை. ஆனால், திருவள்ளுவர் படத்துக்கு காவி சாயம் பூசி தனது சுயரூபத்தை காட்டியுள்ளார்.

திருவள்ளுவர் எந்தக் காலத்திலும் காவி உடை அணிந்தது இல்லை. ஆனால் வேண்டுமென்றே, பிரச்சினையை உருவாக்க வேண்டும், தமிழகத்தில் தமிழ்மொழியை கொச்சைப்படுத்த வேண்டும், தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சையான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார் ஆளுநர். அதற்கு அவர் மட்டும் பொறுப்பல்ல. ஆளுநரை ஊக்குவித்து இதுபோன்ற செயல்களை செய்யத் தூண்டுதலாக இருப்பது பிரதமர் நரேந்தி மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான்.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநரை வைத்து தொல்லை கொடுப்பது மோடி அரசில் தான் அரங்கேறி வருகிறது. அதற்கு முதலில் பலியானவன் நான் தான். கிரண்பேடியை வைத்து மோடி, அமித்ஷா தொல்லை கொடுத்தனர். அது இப்போதும் தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைவில் வந்துவிடும். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை படிப்படியாக தமிழகத்தில் புகுத்தும் வேலையை பார்க்கிறார்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமியால் இன்று வரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற முடியவில்லை. அதற்கான முயற்சியும் அவர் எடுக்கவில்லை. இப்போது 2024 காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என கூறியுள்ளோம். அதன்படி இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் மூன்று மாதங்களில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும். கிரண்பேடி, தமிழிசை போல் தான் தற்போது பொறுப்பு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் செயல்படுகிறார்.

ஆளுநர் அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு முதல்வர், அமைச்சர்கள் மீது கவனம் செலுத்தாமல் கொம்யூன் பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகளை வைத்து கூட்டம் போடுகிறார். அவருக்கு கருத்து இருந்தால் எழுத்துபூர்வமாக முதல்வர், அமைச்சர்களுக்கு கடிதம் அனுபலாம். ஆனால் நேரடியாக தலையிடக்கூடாது. ஆளுநர் சில விஷயங்களில் தலையிட்டு இருக்கிறார். அது வரவேற்கதக்கது. குறிப்பாக, கஞ்சா விற்பனை முற்றிலுமாக மூன்று மாதங்களில் ஒழிக்கப்படும் என்பதும் குப்பை அள்ளும் விவகாரத்தில் தலையிட்டிருப்பதும் வரவேற்கத் தக்கது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE