தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தை விட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கடந்தகல்வி ஆண்டுக்கான தேர்வு முடிவுகளும் சமீபத்தில் வெளியிடப்பட்டுவிட்டன.

இதற்கிடையே வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை அளித்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு மக்களவைத் தேர்தல்முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதேநேரம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் கோடை வெயில் தாக்கமும் சற்று தணிந்து காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை ஜூன் 6-ம் தேதி திறப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்:

வரும் 2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். எனவே குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பள்ளிகள் திறப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளை துரிதமாக எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, பள்ளிகளை ஜூன் 2-வது வாரத்தில் திறக்கலாம் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE