சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்தால், நீதிமன்ற அவமதிப்புவழக்கு உட்பட வலுவான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்று உறுதிபட தெரிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை வலுவிழந்து உள்ளதாக காரணம் காட்டி, அந்த அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரம், நீதிமன்ற உத்தரவின்படி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை சீரமைக்கும் முயற்சிகளிலும் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கோரியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயசங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில், இது தொடர்பாக தமிழக நீர்வளத் துறை செயலருடன் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கடந்த 2 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தினார். கேரள அரசின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்திருப்பது பற்றியும் அவர்கள் தீவிரமாக ஆலோசித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சகத்தை முதலில் நாடுவதாக முடிவு செய்யப்பட்டது.
» தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு
» “டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பஞ்சாபை கட்டுப்படுத்துகின்றனர்” - பிரதமர் மோடி
இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ளுமாறு கேரள அரசு விண்ணப்பித்துள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கு தமிழக அரசுகடும் ஆட்சேபம் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய சுற்றுச்சூழல்,வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டு குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் இந்த கோரிக்கையை, வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளது.
எனவே, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் கேரள பாசன வாரியத்தின் தற்போதைய செயலும், மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு இதை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதும் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயல் ஆகும்.
தவிர, மத்திய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டு குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பான ஆட்சேபத்தை தமிழக நீர்வளத் துறை செயலர் ஏற்கெனவே விரிவாக தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகள் பின்பற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும்.
எனவே, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளை நீக்க வேண்டும். எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்த ஒரு கோரிக்கையையும் பரிசீலனைக்கு ஏற்கக் கூடாது.
சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தாங்கள் தனிப்பட்ட முறையில் இதில் உடனே தலையிட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு உறுப்பினர் செயலருக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது: தற்போது உள்ள முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணையை கட்டுவதற்கான கேரள அரசின் முன்மொழிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது. தற்போது இருக்கும் அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் கடந்த 2006 பிப்ரவரி 27 மற்றும் 2014 மே 7-ம் தேதியிட்ட தனது தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்பிறகு, 2018-ம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது. அப்போது, புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்ற அனுமதி தேவை என்று உச்ச நீதிமன்றம் அப்போதே தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago