தமிழகத்தில் நடப்பாண்டில் 109 பேரின் உடல் உறுப்புகள் தானத்தால் 642 பேருக்கு மறுவாழ்வு

By சி.கண்ணன்

சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் மட்டும் மூளைச்சாவு அடைந்த 109 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு 642 நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது.

இதுதொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியது: “இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. அதனால், இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழகத்தில் இதுவரை 170 பேர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் 178 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தானமாக பெற்ற உறுப்புகள் மூலமாக 1,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

அதேபோல், நடப்பாண்டில் மூளைச்சாவு அடைந்த 109 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அதில், 66 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 43 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் மூளைச் சாவு அடைந்தவர்கள். இதன்மூலம் 642 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

நடப்பாண்டில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து 17 பேரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து மட்டும் 20-க்கும் மேற்பட்ட உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

ஒருவர் மூளைச் சாவு அடையும்போது அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். பின்னர், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம்.

அதைத் தொடர்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த வேண்டும். இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன. அவற்றை ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்பட பல அரசு மருத்துவமனைகள் திறம்பட கையாண்டு சாத்தியமாக்கியுள்ளன” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE