கேரள அரசுக்கு எதிராக மே 27-ல் குமுளி நோக்கி 5 மாவட்ட விவசாயிகள் பேரணி @ முல்லை பெரியாறு விவகாரம்

By என்.கணேஷ்ராஜ்

குமுளி: முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட திட்டமிடும் கேரள அரசைக் கண்டித்து மே 27-ம் தேதி ஐந்து மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. அதில், ‘முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தற்போதுள்ள அணைக்கு 1,200 அடி கீழே புதிய அணையை கட்டியபின், பழைய அணையை இடிக்க அனுமதிக்க வேண்டும். புதிய அணை கட்டும் போதும், கட்டி முடிக்கப்பட்ட பின்னும், தமிழகத்துக்கான தண்ணீர் பகிர்வு தற்போதைய ஏற்பாட்டின்படி தடையின்றி தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஆய்வு செய்த மத்திய அரசு, அதை நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு மே 14-ல் அனுப்பியது. மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு மே 28-ல் இதுதொடர்பான கூட்டத்தை நடத்த உள்ளது.

கேரளாவின் இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கேரளாவைக் கண்டித்து மே 27-ம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறியது: “1979-ம் ஆண்டு ஆரம்பித்த முல்லை பெரியாறு அணைப் பிரச்சினை பல்வேறு சட்ட சீர்திருத்தங்களுக்கு பிறகும் ஓய்ந்தபாடில்லை. எப்படியாவது முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும் என்று கேரள அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் நியமித்த இந்தியாவின் தலைசிறந்த நிபுணர்கள் குழு 13 கட்ட ஆய்வுகள் நடத்தி அணையின் உறுதித்தன்மையை நிருபித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரளா புது அணை கட்டுவதில் பிடிவாதமாக இருப்பது 152 அடி தண்ணீரைத் தேக்குவதற்கு முட்டுக்கட்டை போடுவதற்காகத்தான்.

பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம்

மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை எப்படியாவது பணிய வைத்து முல்லை பெரியாறு அணையை இடித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டும் கேரளாவின் கனவு ஒருபோதும் பலிக்காது.

கேரள அரசின் இச்செயலை கண்டித்து, வரும் திங்கட்கிழமை (மே 27) காலை 10 மணி அளவில் லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தின் முன்பாக கூடும் 5 மாவட்ட விவசாசிகள் அங்கிருந்து குமுளியை நோக்கி பேரணியாக செல்கிறோம். ராமநாதபுரம், சிவகங்கை மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு உணர்வாளர்கள் இதில் திரளாக கலந்து கொள்கின்றனர்” என்று அவர் கூறினார்.

இதனிடையே, "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

‘கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விவரம்: “இது நீதிமன்ற அவமதிப்பு செயல்!” - முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

அதேவேளையில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டணிக் கட்சி என்று பாராமல், கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறியுள்ளார். அதன் விவரம்: கூட்டணிக் கட்சி என்று பாராமல்.. - இபிஎஸ் கண்டனம் @ முல்லைப் பெரியாறு விவகாரம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE