“தேர்தலுக்குப் பின் அதிமுக அணிகள் இணையும்” - கு.ப.கிருஷ்ணன் கருத்து @ திருச்சி

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: “பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி வைத்தாலும், மாநில முதல்வராக இருந்த அவர் சுயேச்சையாக போட்டியிட்டிருக்கக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்தால்தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அணிகள் இணையும்” என்று இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சியில் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சதய விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முத்தரையர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர், ஓ.பன்னீர்செல்வத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் வருவார் என்று கூறிச் சென்றார். இதற்கிடையே மாலையில் கு.ப.கிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் வந்து முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதனால், கு.ப.கிருஷ்ணன், ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிவிட்டார் என்ற பேச்சு எழுந்தது. இதுதொடர்பாக கு.ப.கிருஷ்ணன் இந்து தமிழ் திசை நாளிதழிடம் கூறியது: “ஓபிஎஸ் தலைமையில் மாலையில் நிகழ்ச்சி நடைபெறும் என்று என்னிடம் முதலில் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு ஊர் மக்கள் சேர்ந்து ஏப்.23-ம் தேதி மாலையில் நடத்தும் ஒரு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஓபிஎஸ் தலைமையில் மாலையில் நடைபெறும் முத்தரையர் விழாவில் நான் பங்கேற்க இருப்பதால், அந்த நிகழ்ச்சியை காலையில் நடத்தும்படி நான் கேட்டுக் கொண்டேன். அதன்படி அவர்களும் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் தலைமையில் காலையில் நிகழ்ச்சி நடைபெறும் என ஏப்.22-ம் தேதி இரவு 10 மணிக்கு எனக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால், என்னால் காலையில் வர இயலவில்லை. இது அவர்களுக்கும் தெரியும். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பயணித்தாலும், நான் அதிமுகவில் தான் இருக்கிறேன். ஓபிஎஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும், மாநில முதல்வராக இருந்த அவர் சுயேச்சையாக போட்டியிட்டிருக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்தால் தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அணிகள் இணையும்’ என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE