தொகுதி வாரியாக பரிசு வழங்குகிறார் நடிகர் விஜய்: 10, 12-ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்தோருக்கு தலா ரூ.5,000

By துரை விஜயராஜ்

சென்னை: கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 10, 12 -ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையை தவெக தலைவர் நடிகர் விஜய் வழங்குகிறார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், சட்டப்பேரவை தேர்தல் தான் ஒரே இலக்கு என்றும் அப்போது விஜய் தெரிவித்தார்.அதேசமயம், கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.

அப்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார். மாணவ - மாணவியரை விஜய் ஊக்கப்படுத்திய சம்பவம் ஒருபக்கம் அரசியலாக பார்க்கப்பட்டாலும், மறுபக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பிளஸ் 2, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான போது தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கு வாழ்த்துத் தெரிவித்த விஜய், “விரைவில் நாம் சந்திப்போம்” என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, விஜய் கட்சி நிர்வாகிகள், அந்தந்த தொகுதிகளில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ - மாணவியரின் பெயர் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்று, அனைத்து தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியரின் பெயர் பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஜய் கட்சி நிர்வாகிகள் கூறுகையில், “மாணவர்களின் பட்டியலை தயார் செய்து கட்சி தலைமைக்கு அனுப்பிவிட்டோம். அதுமட்டுமில்லாமல், மாணவர்களின் சுயவிவரங்கள், பெற்றோர் பெயர், வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்று தலைமைக்கு அனுப்பி இருக்கிறோம். அடுத்த மாதம் விஜய், மாணவர்களை சந்திக்க இருக்கிறார். வார இறுதி நாளில் விஜய் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆனால், இதுவரை தேதி இறுதி செய்யப்படவில்லை. அந்த சந்திப்பின் போது, கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவியருக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசு வழங்க இருக்கிறார் விஜய்”, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE