பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் மனு

By கி.கணேஷ்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வாயிலாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சார்பில், பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், பி.தாமோதரன், சூரிய பிரகாசம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை சந்தித்து வெள்ளிக்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், “இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத செயலை, தேர்தல் ஆதாயத்துக்காக நரேந்திர மோடி செய்து வருகிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக மதம், இனம், மொழியின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்.

அவர் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்காமல், மக்களை பிளவுபடுத்தி, குற்றம் சுமத்தி வேற்றுமை அரசியலை உருவாக்கி, தேர்தலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அவர் செய்தது குற்றம் என நாங்களும் தொடர்ந்து ஆணையத்திடம் தெரிவித்து வருகிறோம். பிரதமர் மோடி ஒடிசாவில் புரி நகரில் உரையாற்றியபோது, புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி 6 ஆண்டுகளாக காணவில்லை என்று கூறியுள்ளார்.

பிரதமருக்கு தெரிந்திருந்தும் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?. தேர்தல் நேரத்தில் குறிப்பாக, தமிழகத்தை ஏன் தாக்க வேண்டும்?. தமிழகம் வந்தால், தமிழர்கள் மீது உருகிப் பேசும் அவர், வேறு மாநிலம் சென்றால் தமிழர்களை குற்றம் சாட்டுகிறார். பிரதமர் தொடர்ந்து இது போன்று பேசுவதை தடுக்க வேண்டும். எஞ்சியுள்ள பிரச்சாரத்தில் பங்கேற்க பிரதமருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். தடை செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE