சென்னை: முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரளா மாநில அரசின் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேரள மாநில அரசு முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பத்தை ஒன்றிய அரசிடம் அளித்ததாகவும்,இந்த விண்ணப்பம் மே 28-ம் தேதி மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டு இருக்கிறது என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
முல்லை பெரியாறு புதிய அணைதொடர்பான விரிவான திட்ட அறிக்கையை 10 பேர் அடங்கிய சிறப்புகுழு தயார் செய்துள்ளது. இதன்படி பழைய அணையை முழுமையாக இடித்துவிட்டு ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டப்படும். அணை கட்டத் தொடங்கிய 5 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.
வண்டிப்பெரியாரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் புதிய அணையை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்றெல்லாம் கேரள மாநில அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
» விதிமீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ
» மதிமுக அசைக்க முடியாத அரசியல் சக்தியாகும்: தொண்டர்களுக்கு வைகோ கடிதம்
முல்லைப் பெரியாறு அணையின் பலம் மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவின் சார்பில், பல்வேறு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வுகள் நடந்தன.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழுவின் அறிக்கை 2012 ஏப்ரல் 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
“முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருப்பதால், வேறு புதிய அணை கட்டத் தேவை இல்லை; நில நடுக்கம் ஏற்பட்டாலும முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, அதன் அருகில் இருக்கும் பேபி அணை, இடுக்கி அணை மற்றும் வைகை அணைகளுக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை.
பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது'' என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.
2014 மே 7 ஆம் தேதி அன்று அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, தீர்ப்பு வழங்கியது. அத் தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடி என்ற அளவுக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,மத்திய நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர் தலைமையில் மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவும், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த பின்னர், அணை பலமாக உள்ளதால் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்று அறிவித்தது. தமிழக அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி உயர்த்தப்பட்டது.
ஆனால், கேரள அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியது.
தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, 2014 டிசம்பர் 3 ஆம் தேதி, கேரளாவின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ‘முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே; அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்கி வைக்கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை’ என்று தனது முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுகள் மேற்கொள்வதும் , திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளதும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கேரள அரசின் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago