வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்துக்கு மழை வாய்ப்பு எப்படி?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (மே 24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்று வங்கதேசத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலிம்படி, வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 24) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து நாளை (மே.25) புயலாக உருவாகும். இதற்கு ஓமன் நாடு ‘ரெமல்’ எனப் பெயர் வழங்கியுள்ளது. இது வங்கதேசத்துக்கு அருகே தீவிர புயலாகவே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நிலவரம் எப்படி? கடந்த 2 வாரங்களாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் சற்றே தணிந்தது. திருச்சியில் 93 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை மழை பதிவானது.

இந்நிலையில், இப்போது வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்போது தமிழகத்துக்கான மழை வாய்ப்பு படிப்படியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மழைப் பொழிவு குறையத் தொடங்கிய நிலையில் இந்தப் புயல் வலுப்பெற பெற மழை முற்றிலுமாக நீங்கும்.

இப்போதைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்தப் புயல் வலுப்பெற்ற பின்னர் ஒரு சில வட மாவட்டங்களில் மீண்டும் கடுமையான வெப்பம் ஏற்படும். அதேவேளையில், கேரளாவில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கொச்சி போன்ற நகரங்களில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதேபோல், கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE