சிலந்தி ஆறு தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும்: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிரி படுகையில் அமராவதி (பம்பாறு) துணை படுகையின் ஒரு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதன் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என தமிழக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் எதுவும் தமிழக அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை. எனவே, கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் தமிழக நீர்வளத் துறை செயலர் கேட்டபடி, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பாறு) துணை படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்.

இப்பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்ய மிகவும் தேவைப் படுவதால், இந்த விவரங்களை தமிழகத்துக்கு உடனடியாக அளிக்க வேண்டும்.

தமிழகம் - கேரளா ஆகிய இரு மாநிலங்கள் இடையிலான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தும் வகையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE