சித்திரகிரி மலை முருகன் கோயிலில் மழையில் சிக்கித் தவித்த 35 பக்தர்கள் மீட்பு

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஆரல்வாய்மொழி சித்திரகிரி மலை முருகன் கோயிலில் சிக்கித் தவித்த 35 பக்தர்களை, தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்து வந்த நிலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் தென்மலை சித்திரகிரி முருகன் கோயிலில் புதன்கிழமை காலையில் இருந்து பக்தர்கள் மலையேறி சென்று முருகனை தரிசித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

அப்போது கனமழை நீடித்ததால் மழையில் இருந்து குறுகிய பாதையில் இறங்க முடியாமல் பக்தர்கள் தவித்தனர். 3 மணி நேரமாக தவித்த பக்தர்கள் குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள், மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.

சித்திரகிரி மலையில் தவித்த 35 பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆரல்வாய்மொழி சித்திரகிரி மலை முருகன் கோயிலில் இருந்து இன்று கனமழையால் கீழே இறங்க முடியாமல் தவித்த பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE