மோசமான வானிலையால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது: பயணிகள் வாக்குவாதம்

By சி.கண்ணன்

சென்னை: அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் அந்தமான் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது. விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புதன்கிழமை காலை புறப்பட்டது. விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். மதியம் அந்தமான் வான்வெளியை விமானம் நெருங்கிய போது, கடுமையான சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால், அந்தமானில் விமானம் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததார்.

இதைத்தொடர்ந்து, மீண்டும் சென்னைக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பிற்பகலில் விமானம் சென்னையில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். அந்தமானில் நிலவும் மோசமான வானிலையால் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் விமானம் வியாழக்கிழமை அந்தமானுக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பயணிகள், விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“நாளையோ அல்லது வேறு ஏதாவது நாளிலோ நீங்கள் பயணம் செய்யலாம். அதற்கு ஏற்ப உங்கள் பயண டிக்கெட் மாற்றிக் கொடுக்கப்படும். இல்லையென்றால் உங்கள் பயணக் கட்டணம் விதிமுறைகளின்படி திருப்பி அளிக்கப்படும்” என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE