வாகனங்களில் ‘டாக்டர்’ ஸ்டிக்கர் ஒட்டிய மருத்துவர்கள் மீதான நடவடிக்கைக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை!

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வாகனங்களில் ‘டாக்டர்’ என்பதைக் குறிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், தவறான நோக்கத்துக்காக ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் என போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு ஊழியர், ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என்பதைக் குறிக்கும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரித்து இருந்தது. இதற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளரான மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், போலீஸாரின் இந்த அறிவிப்பால் அவசர நிமித்தமாக செல்லும் மருத்துவர்கள் அவதிக்குள்ளாக நேரிடும். மருத்துவர்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடுவதில்லை, என அதில் கூறியிருந்தார்

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உயிர் காக்கும் அவசரமாக செல்லும் மருத்துவர்களுக்கு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கலாமே? பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு ஸ்டிக்கர் வழங்குவது போல தேசிய மருத்துவ ஆணையமும் மருத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கரை விநியோகிக்கலாமே என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கில் தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகியோரையும் எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் ஜூன் 14-க்கு தள்ளிவைத்தார்.

அதுவரை டாக்டர் என்பதைக் குறிக்கும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், மருத்துவ கவுன்சிலின் வாதத்தைக் கேட்டபிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். அதேநேரம் தவறான நோக்கத்துடன் ‘டாக்டர்’ என்ற ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டியிருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் எக்காரணம் கொண்டும் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE