தமிழகத்தில் கோடை மழையால் பயிர்கள் பாதிப்பு - கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

By கி.கணேஷ்

சென்னை: தமிழகத்தில் கோடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகளை வருவாய் மற்றும் வேளாண் துறைகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மிதமானது முதல் அதி கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில், சில தினங்களில் மழை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக, டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெல், பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பயிர் பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் வேளாண்துறையினர் இணைந்து ஆய்வு செய்த வருகின்றனர். தமிழகம் முழுவதும் பயிர் பாதிப்பு குறித்து மாவட்ட அளவிலான வேளாண் அதிகாரிகள் தலைமையில் ஆய்வு செய்யப்படுகிறது. விரைவில், பயிர் பாதிப்பு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்ட பின், பயிர் பாதிப்புக்கான இழப்பீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனிடையே, தமிழகத்தில் பெய்து வரும் கோடை மழைக்கு இதுவரை 12 பேர் உயரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. அதன் முழு விவரம்: தமிழகத்தில் கோடை மழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழப்பு: அரசு தகவல்

கனமழை முன்னெச்சரிக்கை: வடதமிழக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை காலை 05.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதனால், மே 24-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமையை பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | முழு விவரம் > வானிலை முன்னறிவிப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE