பேருந்தில் காவலர்கள் டிக்கெட் இன்றி பயணிக்க முடியாது: போக்குவரத்துத் துறை விளக்கம்

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, “காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

இந்த நிலையில், நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE