மதுரையில் புதிய மத்திய சிறைச்சாலைக்கு விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரையில் புதிய சிறைச்சாலை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

மதுரை மத்திய சிறைச்சாலை நெருக்கடி காரணமாக, மேலூர் அருகேயுள்ள சிட்டம்பட்டிக்கு மாற்றப்படவுள்ளது. புதிய சிறைச் சாலை கட்டுவதற்கு சிட்டம்பட்டி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய சிறைச் சாலை கட்டுவதற்கு விளை நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெற்குத்தெரு செம்பூர் பெரியார் பாசன விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், 'செம்பூர் கிராமத்தில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள பெரியார் பாசன நஞ்சை நிலங்கள் முல்லை பெரியாறு 10-வது கால்வாயின் 20-வது மடை பாசனத்துக்கும் பெரியகேசின் கண்மாய் மற்றும் செம்பூர் கண்மாய் பாசனத்துக்கும் கட்டுப்பட்டது. இந்த நஞ்சை நிலங்களில் நாங்கள் காலம்காலமாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில், மதுரை மத்திய சிறைச் சாலை அமைக்க இடம் தேர்வு பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எங்கள் நஞ்சை நிலங்களையும் கையகப்படுத்தப் போவதாக தெரிகிறது. செம்பூர் கிராமத்தில் சாகுபடிக்கு தகுதியில்லாத மேய்ச்சல் தரிசு நத்தம் புறம்போக்கு மற்றும் அரசு தரிசு நிலங்கள் போதுமான அளவில் உள்ளது. இந்த நிலங்கள் மத்திய சிறைச் சாலை கட்டுவதற்கு போதுமானது.

அந்த நிலங்களை விட்டு விட்டு நெல் விளையும் விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இப்பகுதி விவசாயிகள் இந்த விளை நிலங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். எனவே, மத்திய சிறைச்சாலை அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE