உயரழுத்த மின்சார கம்பி உரசி விழுப்புரம் சிறுவன் உயிரிழந்த சம்பவம்: எக்ஸ் தளத்தில் மின் வாரியம் விளக்கம்

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: வீட்டின் மீது செல்லும் உயரழுத்த மின்சார கம்பி உரசி சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து மின் வாரியம் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கட்டுமானப் பணியைத் தொடர வேண்டாம் என வீட்டு உரிமையாளருக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் ராஜகோபால் வீதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவரது 12 வயது மகன் கிஷோர் ராகவ் 6-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறைக்காக விழுப்புரம் - விராட்டிக்குப்பம் சாலையில் உள்ள கிருஷ்ணா நகரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார் கிஷோர் ராகவ். இந்நிலையில், கடந்த 19ம் தேதி மாலை கிஷோர் ராகவும், சிறுவன் கிருத்விக்கும் (7) புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மாடிக்குச் சென்று விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வீட்டின் மாடியில் தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்சார கம்பி, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் மீது உரசியதில் கிஷோர் ராகவ் உடல் முழுவதும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுவனான கிருத்விக் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டின் மாடியில் கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். மின்வாரியத்தின் அலட்சியத்தால் இவ்விபத்துகள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு மின்வாரியத்தின் எக்ஸ் தள பக்கத்தில், ‘விழுப்புரத்தில் 19.05.2024 அன்று ஏற்பட்ட மின் விபத்து குறித்து மின் வாரியம் வருந்துகிறது. தொடர்ந்து சமூக வலைதளத்தில் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மின்வாரியம் செய்து வருகிறது. இந்த நிகழ்வில், பாதுகாப்பற்ற முறையில் கட்டுமானத்தில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் பி.சதீஸ்குமாருக்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கட்டுமானப் பணி நடைபெறுவது, விதிமுறைகளுக்கு முரணான செயல் என்றும், கட்டுமான வேலைகளை தொடர வேண்டாம் எனவும், மின் கம்பிகளை மாற்றி அமைத்திட்ட பிறகே தொடர வேண்டும் என 24.01.2024, 17.042024 ஆகிய இரண்டு தேதிகளில் அவருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டன. அதை மீறி செயல்பட்டு மின் விபத்து ஏற்பட்டால் காவல் துறை நடவடிக்கை எடுப்பதுடன் ஏற்படும் இழப்பீடுகளுக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் கடுமையாக அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டது.

கட்டுமானத்தை மின்கம்பி அருகில், எந்த பாதுகாப்பு தடுப்புகளையும் அமைக்காமல், உத்தரவுகளை மீறி கட்டுமானம் செய்தது, ஒன்றும் அறியா குழந்தைகளை பாதித்து சொல்லண்ணா வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக வீடு கட்டுவோர் மேலே மின் கம்பியிருந்தால், தயவு செய்து ஆன்லைனில் இடமாற்றத்துக்கு விண்ணப்பித்து, கம்பிகளை மாற்றி அமைத்த பின்னரே கட்டுமானத்தை ஆரம்பிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE