“அமமுகவை பாஜகவுடன் தினகரன் இணைத்துவிடலாம்” - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

By இ.மணிகண்டன்

விருதுநகர்: ‘டிடிவி தினகரனைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய விசுவாசியாக மாறியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாஜகவினர் சொல்லாத கதைகளை எல்லாம் இவர் சொல்வது வேதனையளிக்கிறது. இதற்கு பேசாமல் அவர் தனது அமமுக கட்சியை பாஜகவில் இணைத்துவிடுவது மேலாக இருக்கும்” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தேசபந்து திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிவகாசி எம்எல்ஏ அசோகன் முன்னிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கலந்துகொண்டு ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அனைவரும் பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். அதன்பிறகு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் மாணிக்கம்தாகூர் கூறியதாவது: “கடந்த 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்பூதூரில் ராஜீவ்காந்தி மரணம் நிகழ்ந்தது. இதுபெரிய படுகொலையாக இருந்தது. தமிழ் மண்ணில் அவர் சிந்திய ரத்தத்தை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காகவும், ஒற்றுமைக்காகவும் ஒவ்வொருவரும் அவரை நினைவுகூருகிறோம். 21ம் நூற்றாண்டில் இந்தியா மிகப்பெரிய நாடாக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ராஜீவ்காந்தி. இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும் எதிர்த்து உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.

புதிதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தவர் அதிக விசுவாசம் காட்டுவார்கள். அதைத்தான் தற்போது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் காட்டுகிறார். எதிர்க்கட்சிகள் எந்த இடத்திலும் சிறுபான்மையினரைப் பற்றியோ முஸ்லிம்களைப் பற்றியோ பேசவில்லை. பேசிக்கொண்டிருப்பது எல்லாம் மோடியும் அமித்ஷாவும் தான். டிடிவி தினகரனைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய விசுவாசியாக மாறியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பாஜகவினர் சொல்லாத கதைகளை எல்லாம் இவர் சொல்வது வேதனையளிக்கிறது. அவர் தனது அமமுக கட்சியை பாஜகவில் இணைத்துவிடுவது மேலாக இருக்கும். இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு பாஜக அரசு போட்டுள்ள பொய் வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது. திரைப்பட முன்னணி நடிகர்கள் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என்று பொதுவாகச் சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால், போதைப் பொருள் பிரச்சினை பெரும் பிரச்சினை. சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள பிடிபட் போதைப் பொருள் காணாமல் போய் உள்ளது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழக பத்திரிகையாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். போதைப் பொருள் பிரச்சினையில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. படிக்கும், இளைஞர்கள் வாழ்வில் முக்கிய பிரச்சினையாகவும், சமுதாய சீரழிவுக்கு முக்கிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது போதைப் பொருள் புழக்கம். இதில் சம்பந்தப்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE