ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக மாநில பொருளாளரிடம் சிபிசிஐடி விசாரணை @ கோவை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் சிக்கியது. இந்தப் பணம் பாஜகவின் திருநெல்வேலி தொகுதி மக்களவை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவுக்கு சொந்தமானது என புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவையில் வசித்து வரும் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு திங்கள்கிழமை சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதில், இன்று (மே 21) காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால், கட்சி பணி தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி உள்ளதால் 30-ம் தேதிக்கு பிறகு ஆஜராவதாக எஸ்.ஆர்.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே 21) காலை சிபிசிஐடி போலீஸார் டிஎஸ்பி சசிதரன் தலைமையில் கோவை கணபதி சக்தி நகரில் உள்ள எஸ்.ஆர்.சேகர் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் இருந்த சேகரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு பிறகு 11 மணி அளவில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.சேகர், “வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு திங்கள்கிழமை எனக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். நான் கால அவகாசம் கேட்டிருந்தேன். இந்த நிலையில் போலீஸார் திடீரென இன்று காலை எனது வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். பாஜக விசாரணைக்கு அஞ்சாவது. நாங்கள் விசாரணையைக் கண்டு ஓட மாட்டோம்.

நான் போலீஸாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தேன். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். திமுக அரசு பாஜகவை களங்கப்படுத்தவும், அவமானப்படுத்தவும் தொடர்பு இல்லாத விவகாரத்தில் பாஜக அமைப்பு செயலாளரிடமும், பொருளாளர் ஆகிய என்னிடமும் விசாரிக்க வேண்டும் என போலீஸாரை தூண்டுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE