தஞ்சை: காவிரி மேலாண்மை ஆணைய தீர்மான நகல்களை கொளுத்தி விவசாயிகள் போராட்டம்

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மேகேதாட்டு அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தீர்மான நகல் எரிப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாட்ஷா ரவி, இளைஞர் அணி மாநில செயலாளர் மகேஸ்வரன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் அறிவு, புதுக்கோட்டை மாவட்ட செயலர் பத்மநாபன், சங்க கௌரவ தலைவர் திருப்பதி மற்றும் பல கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, “மேகேதாட்டு அணை கட்டுமான திட்டத்துக்கு கர்நாடகாவுக்கு ஆதரவான தீர்மானத்தை கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். நடுவர் மன்ற தீர்ப்பை குழி தோண்டிப் புதைக்கும் காவிரி ஆணையத்தின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக மேகேதாட்டில் அணை காட்டுவதும் கர்நாடக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். தீர்மானம் கொண்டு வரும்போது எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் செயல்பட்ட தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்திப் சக்சேனா, தமிழக அரசுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் துரோகம் செய்துவிட்டார்.

எனவே இனியும் அவர் இந்த பதவியில் தொடரக்கூடாது. அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுகிறது. இதை தமிழக அரசு தட்டிக் கேட்கவில்லை. இதனால் தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் அனைத்தும் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கும் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE