சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நாளை நடத்த அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய ஐந்து மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையில் நாளை ( மே 22) நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், “புராதன கட்டிடமான இங்கு மாஸ்டர் பிளான் ஏதுமில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது. உயர்நீதிமன்ற வளாகத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து மாஸ்டர் பிளான் வகுக்க உத்தரவிட வேண்டும். மாஸ்டர் பிளான் வகுக்கும் வரை, ஐந்து மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “பழைய சட்டக் கல்லூரியை இடிக்கப்போவதில்லை. அதன் அருகில் தான் ஐந்து மாடி கட்டிடம் அமையப் போகிறது” என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினர்.
» கனமழை எச்சரிக்கை: நெல்லை மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு செல்லவில்லை
» தூத்துக்குடி | மீன்பிடி விசைப்படகுகள் ஆய்வு தொடக்கம்: 18 குழுக்கள் பணியில் ஈடுபாடு
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், “அடிக்கல் நாட்டுவதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை. அனுமதி பெறாமல் ஒரு செங்கலை கூட எடுத்துவைக்க முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், “ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் மோகன் அளித்த விண்ணப்பத்தை சென்னை உயர் நீதிமன்ற கட்டிடக் குழு நேற்று மாலை ஆய்வு செய்தது. அந்த கூட்டத்தில், புதிய நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய குழுவின் அறிக்கை அடிப்படையில் முடிவெடுத்த பிறகே கட்டுமானப் பணிகள் துவங்கப்படும். அதற்கு முன் எந்த கட்டுமான பணிகளும் துவங்கப்படாது” என உறுதி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பிரிவு பதிவாளர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “மத்திய, மாநில அரசுகள் தவிர, வேறு எவரும் கட்டுமானங்கள் மேற்கொள்வதாக இருந்தால் தான் முன் அனுமதிகள் தேவை” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற கட்டிடக் குழுவின் கூட்ட முடிவுகளை பதிவு செய்து, நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்தலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டதுடன், சட்டக் கல்லூரி வளாகத்தில் இருந்த இரு சமாதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிடவும் பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், அடிக்கல் நாட்டு விழாவை இந்து மத முறைப்படி மட்டுமல்லாமல், அனைத்து மத முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என, திராவிடர் கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முரளி சேகர் முறையீடு செய்தார். அதற்கு, “இது ஒரு மத நிகழ்வு என எப்படி அனுமானிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது” என நிராகரித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago