தமிழகத்தின் 90 நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் குறைவான நீர் இருப்பு: வேகமாக நிரம்பும் பேச்சிப்பாறை அணை

By டி.செல்வகுமார் 


சென்னை : தமிழகத்தில் உள்ள சிறியதும், பெரியதுமான 90 நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் குறைவான அளவே நீர் இருப்பு உள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கனஅடி. இன்றைய நிலவரப்படி 48 ஆயிரத்து 188 மில்லியன் கனஅடிதான் (21.48 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் வாட்டி வதைத்தது. வழக்கமாக வேலூர், கரூர் பரமத்தி ஆகிய ஊர்களில்தான் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இந்தாண்டு திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டை என பல பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருந்தது. பல இடங்களில் வெப்ப அலை வீசியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது, வரும் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக இந்தக் காலக்கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். ஆனால், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்தே தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம், காற்றின் திசை மாறுபாடு உள்ளிட்டவை காரணமாக மழைப் பொழிவு உள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருவதால் வெப்பம் குறைந்திருக்கிறது. பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழலும் நிலவுகிறது. கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களின் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணை நிரம்பும் நிலையில் உள்ளது. மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையின் முழு நீர் மட்டம் 120 அடி. தற்போதைய நீர்மட்டம் 49.31 அடியாக உள்ளது.

“தமிழக பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறியதும் பெரியதுமான 90 நீர்த்தேக்கங்களில் பாதிக்கும் குறைவான அளவு நீரே இருப்பு உள்ளது. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கனஅடி. இன்றைய நிலவரப்படி 48 ஆயிரத்து 188 மில்லியன் கனஅடிதான் (21.48 சதவீதம்) நீர் இருப்பு உள்ளது” என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE