இடி, மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு: குடிசைகள், வீடுகள் சேதமடைந்ததாக தமிழக அரசு தகவல்

By கி.கணேஷ்

சென்னை: கடந்த சில தினங்களில் பெய்த மழையில், தூத்துக்குடி மற்றும் சேலத்தில் இருவர் இடி, மின்னல் தாக்கியதில் இறந்துள்ளதாகவும், 7 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் தமிழகத்துக்கு 12.5 செமீ மழை இயல்பாக கிடைக்கும். இந்தாண்டு மார்ச் 1 முதல் மே 19 வரை 8.44 செமீ பதிவாகியுள்ளது. இது இயல்பை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வரும் மே 23ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா ஒருவர் இடி, மின்னல் தாக்கி இறந்துள்ளனர். மழை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் 14 கால்நடைகள் இறந்துள்ளதுடன், 7 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் அலை குறித்தும், பொதுமக்களுக்கு கடல் சீற்றம் குறித்தும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் பாதுகாப்பாக இருக்கும் வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி பேரின் செல்போன்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு வரும் 23-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்லுலாப்பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும். சுற்றுலா வருவதை தவிர்க்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE