சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம்

By எம். வேல்சங்கர்

சென்னை: இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது மற்றும் 4-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3.75 கி.மீ. தொலைவுக்கு இணைக்கும் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மாதவரம் - சோழிங்கநல்லூர் (5-வது வழித்தடம்), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி (4-வது வழித்தடம்) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் பகுதிகளில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமையவுள்ளன.

மொத்தம் 3.75 கி.மீ. தொலைவுக்கு இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பிரத்யேக லாஞ்சிங் கிர்டர் வகையைச் சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பாதையில் சி-4, சி-5 என்று பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 340 தூண்களில் இதுவரை 156 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பாலத்தை தாங்கும் தூண்கள் அதாவது தூண்களில் தொப்பி வடிவிலான கட்டுமானம் (பியர் கேப்கள்) அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர, தூண்கள் மீது இரும்புப் பாலத்தை எடுத்து வைக்கும் பணியும் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: "இந்தப் பாதையில் தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இதுவரை 156 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் யு கர்டர், ஐ கர்டர் தூக்கி வைக்கும் பணியும் நடைபெறுகிறது.

சுமார் 2 ஆண்டுகளில் இரட்டை அடுக்கு மேம்பால பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஆலப்பாக்கம், வளசரவாக்கம், காரப்பாக்கம் ஆகிய நிலையங்களில் நுழைவுவாயில், வெளியேறும் பகுதி அமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டது" என்று அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE