அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு சுழற்சி அடிப்படையில் பணி நேரம் நிர்ணயம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் சுழற்சி முறையில் காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மே மாதம் 6-ம்தேதி வெளியிட்ட தமிழக சுகாதாரத் துறையின் அரசாணையில் கூறியிருப்பதாவது:

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில், அரசு மருத்துவமனை செவிலியர் உதவியாளர் தரம்-2மற்றும் கடைநிலை ஊழியர்களானமருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சுழற்சி அடிப்படையில் பணிநேரம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, செவிலியர் உதவியாளர் தரம் - 2 மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களில் 50 சதவீதம் பேர் முதல் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் இரண்டாம் சுழற்சியிலும், 25 சதவீதம் பேர் மூன்றாம் சுழற்சியிலும் பணியமர்த்தப்படுவார்கள்.

முதல் சுழற்சி நேரம் என்பது காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, இரண்டாம் சுழற்சி மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி, மூன்றாம் சுழற்சி இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE