இலவச திட்டங்களுக்கு பாஜக எதிரி அல்ல: வானதி சீனிவாசன் கருத்து

By செய்திப்பிரிவு

கோவை: இலவசத் திட்டங்களுக்கு பாஜக எதிரி அல்ல என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஊடகங்களுடன் பிரதமர் மோடி உரையாடி வருகிறார். அதில், தேர்தல் வெற்றிக்காக குடும்ப, ஊழல் கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் இலவச திட்டங்களை அறிவிப்பது பற்றி தனது கருத்துகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சலுகை அளிப்பதால், மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற உள் கட்டமைப்பு திட்டங்கள் முடங்குவது பற்றியும், அரசு பேருந்து கழகங்களின் கட்டமைப்புகள் சிதைந்து வருவது பற்றியும் பிரதமர் மோடி தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார். இதனிடையே, இலவசத் திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுகிறார் என ‘இண்டியா' கூட்டணி கட்சியினர் திரித்து வருகின்றனர்.

இலவசத் திட்டங்களுக்கு பாஜக எதிரி அல்ல. ஆனால், முழுக்க முழுக்க தேர்தல் வெற்றிக்காக, தங்களது குடும்ப ஆட்சியை தக்க வைப்பதற்காக இலவசத் திட்டங்களை அறிவிப்பது நாட்டின் வளர்ச்சியை முடக்கி விடும். பிரதமர் மோடியும், பாஜகவும் இலவச திட்டங்களுக்கு எதிரானது என்ற முதல்வர் ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பப் போவதில்லை.

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட ‘இண்டியா' கூட்டணி கட்சித் தலைவர்களும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினரும் உத்தர பிரதேசம், பிஹார் மாநில மக்களை இழிவு படுத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா' கூட்டணி படு தோல்வி அடைவது உறுதி. 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று, மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்பது உறுதி, என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE