இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை அதிகரிக்க முடிவு

By கி.கணேஷ்

சென்னை: இளைஞரணி மாவட்ட செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திமுகவில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை, நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. அதிகபட்சம் 4 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாக இந்த மாவட்டங்கள் அமைகின்றன. பெரும்பாலும், மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மூத்த நிர்வாகிகள் செயலாளர்களாக உள்ளனர். அந்தந்த மாவட்ட அளவில் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சிப்பணிகளை மேற்கொள்வது, தேர்தலின் போது அதற்கான பணிகளை ஒருங்கிணைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உள்ளாட்சி தேர்தல், 2026ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது. இந்த தேர்தலுக்கு ஏற்ப கட்சியை வலுப்படுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும், இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் எண்ணிக்கையை கட்சியின் அனைத்து நிலைகளிலும் அதிகரிக்கும் முயற்சியாக, நிர்வாகிகள் மட்டத்தில் புதுரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையை, இப்போதிலிருந்தே தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மக்களவை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன்படி, முதலில் நிர்வாக ரீதியிலான மாவட்டங்களைப் பிரித்து ஒரு மாவட்டத்துக்கு 2 அல்லது 3 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்குமாறு மாற்றி, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய மாவட்டங்களில் இளைஞரணியில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE