தமிழகத்தில் சமூக பாதுகாப்பு நிதியுதவி திட்டத்தில் தகுதியற்ற 2.6 லட்சம் பயனாளிகள் நீக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் சமூக பாதுகாப்பு நிதியுதவி திட்டத்தில் பயன்பெற்று வந்தவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டு அவர்களுடைய பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர், உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற விதவையர், காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற முதிர்கன்னி, மாற்றுத்திறனாளி உட்பட 25 பிரிவுகளில் தமிழக அரசு நிதியுதவியாக மாதம் 1000 வழங்கப்பட்டு வருகிறது. மணியார்டர் மூலம் உதவித் தொகை வழங்க கூடுதலாக ரூ.50 செலவாகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர். அதேசமயம் அனைத்து வசதிகள் இருந்தும், நல்ல நிலையில் உள்ளவர்கள் பலரும் இந்த திட்டத்தில் பயன் பெற்றுவருகின்றனர். இதனால் உண்மையான பயனாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முறைகேடு புகார்

மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடாக பலர் நிதியுதவி பெற்று வருவதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 100 சதவீதம் கிராம நிர்வாக அலுவலர் தணிக்கை செய்யவேண்டும். வருவாய் ஆய்வாளர் 10 சதவீதம் தணிக்கை செய்யவேண்டும்.

அதைத் தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அளவில் ஒரு அலுவலரும் தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிக்கை அனுப்பியிருந்தார்.

100 சதவீதம் தணிக்கை

அதன்படி கடந்த ஜூலை 11-ம் தேதி தொடங்கிய இந்த தணிக்கை ஜூலை 31-ம் தேதி வரை நடந்தது. இதில் தகுதியற்ற பயனாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் தகுதி நீக்கம் செய்வதற்கான காரணம் குறித்து எழுத்து மூலம் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி நடந்த கிராமசபை கூட்டங்களில், தகுதியான பயனாளிகள் குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டு, கிராம சபையில் தகுதியற்றவர்களை நீக்கியதற்கான காரணம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுகொண்டனர்.

தகுதியற்றவர்கள் நீக்கம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அனைத்து மாவட்டங் களிலும் நடந்த தணிக்கையில் வேலூர், கிரு ஷ்ணகிரி, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக எண்ணிகையில் தகுதியற்றவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு அதிகமானோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அரசுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் மிச்சமாகும்.

தகுதியான பயனாளிகள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக தகுதியற்ற பயனாளிகள் நிதியுதவி பெற்று வந்துள்ளனர். சுமார் 60 ஆயிரம் தகுதியற்ற பயனாளிகள் பெயர் அரசு உதவித் தொகை பெறுவதில் இருந்து தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏராளமானோர் தங்களுக்கு அரசின் நிதியுதவி பெற தகுதி இருந்தும், தங்களை அந்த பட்டியலில் இருந்து அதிகாரிகள் நீக்கிவிட்டதால், தற்போது எங்களுக்கு உதவித்தொகை வரவில்லை என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மீண்டும் மறு தணிக்கை செய்ய முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் 4 நிலைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் தணிக்கை செய்த பிறகு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு காரணம் தெரியாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். அரசின் நிதியுதவி தகுதியான நபர்களுக்கு கிடைத்திட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE