பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்களை தடுக்க நடவடிக்கை: பொது சுகாதார துறை தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: பருவநிலை மாற்றத்தால் பரவும்நோய்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வந்த நிலையில், திடீரென மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. எதிர்பாராத இந்த தட்பவெப்ப நிலைமாற்றத்தால் பருவ கால தொற்றுகள், கொசுக்களால் பரவும் காய்ச்சல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளன.

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

வெப்ப சலனம் காரணமாக வழக்கமாக கோடை காலத்தில் சில நாட்களுக்கு மழை பெய்யும். அந்த தருணங்களில் ஏற்படும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவக் கட்டமைப்பும், முன் அனுபவமும் சுகாதாரத் துறைக்கு உள்ளது. அந்த வகையில், தற்போது ஏற்பட்டிருக்கும் பருவ நிலை மாற்றத்தைக் கையாள தயார் நிலையில் உள்ளோம்.

மழைநீர் தேங்கிய இடங்களில்ஏடிஸ் வகை கொசுக்கள் பெருகாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தொடர்கண்காணிப்பிலும், நோய்த் தடுப்புபணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் காய்ச்சல் பாதிப்புகள்குறித்த விவரங்களை சேகரித்துசுகாதாரத் துறை தளத்தில் பதிவேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பருவகால தொற்றுகளுக்கான மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. எனவே, தமிழகத்தில் பெய்துவரும் மழையால் நோய் பரவல் ஏற்படும் என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. அதை முன்கூட்டியே தடுக்கவும், பாதிப்பு பரவாமல் கட்டுப்படுத்தவும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE