நெல்லையை நிலைகுலையச் செய்த மழை - சாக்கடைகள் பொங்கி சாலைகளில் ஓடின!

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இடி மின்னலுடன் பெய்த பலத்த கோடை மழையால் சாலைகள் வெள்ளக்காடாயின. திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியபோது, பகல்நேர வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவுக்கு சுட்டெரித்தது.

அதன்பின் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் தணிந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

மூலைக்கரைப்பட்டி- 32, பாளையங்கோட்டை- 20, நாங்குநேரி- 3, திருநெல்வேலி- 5.20, கொடுமுடியாறு அணை- 9, நம்பியாறு அணை- 21, காக்காச்சியில் 1 மிமீ மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம்- 91.20 மிமீ மழை பதிவானது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 34.47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 86.22 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 48.74 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 245 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பாபநாசம் அணையில் 16.55 சதவீத நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 14.27, மணிமுத்தாறு அணையில் 48.02, வடக்கு பச்சையாறு அணையில் 4.90, நம்பியாறு அணையில் 20.48, கொடுமுடியாறு அணையில் 5.57 சதவீத நீர் இருப்பு உள்ளது.

இதற்கிடையே திருநெல்வேலி, பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிற்பகலில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இம்மழையால் திருநெல்வேலி மாநகரில் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாயின.

திருநெல்வேலி சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம், முருகன்குறிச்சியிலிருந்து வண்ணார்பேட்டை செல்லும் சாலையோரம், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தைச் சுற்றி சிக்னல் பகுதி, சரோஜினி பூங்கா பகுதி, பாளையங்கோட்டை மத்திய சிறை முன்புள்ள சந்திப்பு, பாளையங்கோடை வ.உ.சி. மைதானம் என, பல்வேறு இடங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து செல்லநேரிட்டது.

மழைநீர் தேங்கி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில், தண்ணீரை உடனுக்குடன் வடியவைக்க மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அரசுத்துறை நிர்வாகங்கள் அக்கறை செலுத்தவில்லை.

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன்புள்ள சந்திப்பில் மழைநீருடன் பாதாள சாக்கடையும் கலந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசியது. மழைகாலங்களில் இந்த பிரச்சினை இப்பகுதியில் நீடித்து வருகிறது.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் நேற்று இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று மாலை 4 மணியளவில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 6.80, சேரன்மகாதேவி- 4.20, மணிமுத்தாறு, நாங்குநேரி- தலா 2.40, பாளையங்கோட்டை- 28, திருநெல்வேலியில் 15.60 மிமீ மழை பதிவானது.

பாளையங்கோட்டை பேருந்து நிலைய சிக்னல் பகுதியில்
கொட்டிய மழை.

தென்காசி, குமரியிலும் மழை நீடிப்பு: தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் சங்கரன்கோவிலில் 40 மி.மீ., சிவகிரியில் 25 மி.மீ., அடவிநயினார் அணையில் 3 மி.மீ. மழை பதிவானது. நேற்று பகலில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 45 மிமீ மழை பதிவானது. களியலில் 35, பேச்சிப்பாறையில் 16, சிவலோகத்தில் 14 மிமீ மழை பெய்தது. மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு 246 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் 44.82 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 137 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், நீர்மட்டம் 46 அடியாக உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 0.3 அடியாக குறைந்துள்ளது. திற்பரப்பு அருவியில் நேற்று மிதமாக தண்ணீர் கொட்டியது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம்
பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீர்.

நெல்லை, தென்காசிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்கள் மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும், வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் இடி மின்னலின்போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம். மரங்களுக்கு கீழ் ஒதுங்க வேண்டாம். காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் என, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்