செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை: உடல்நிலையை கருத்தில் கொள்ளுமாறு வழக்கறிஞர் வாதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றைக்கு தள்ளிவைத்துள்ளது. நேற்று நடந்த வழக்கறிஞர் வாதத்தில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கும்படி கோரப்பட்டது.

அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூன் 14 அன்று சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரு முக்கியமான வழக்கு மற்றொரு சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வருவதால் அதில்ஆஜராக வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை விடுமுறைக்குப்பிறகு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி. ஆர்யமாசுந்தரம், ‘மனுதாரர் ஏற்கெனவே 320 நாட்களுக்கும் மேலாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். எனவே இந்த வழக்கை நீண்ட காலத்துக்கு தள்ளி வைக்கக்கூடாது. இன்றோ அல்லது நாளைக்கோ விசாரிக்க வேண்டும்' என்றார்.

அப்போது துஷார் மேத்தா, இந்த வழக்கில் இங்கு எழுப்பப்பட்டுள்ள அனைத்து சாரம்சங்களும் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டவை. தற்போது இந்த மனுவை அவசர கதியில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

அதையடுத்து ஆர்யமா சுந்தரம், இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரினால், மனுதாரரான செந்தில் பாலாஜிக்கு அதுவரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு ஏற்கெனவே பை-பாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. நீண்டகாலமாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வருகிறார். அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 320 நாட்களாக மனுதாரர் சிறையில் இருப்பதை ஒரு காரணமாக கூற முடியாது. இதுபோன்ற வழக்குகளில் கைதானவர்கள் 2 முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட ஜாமீன் கிடைக்காமல் சிறைக்குள் இருந்து வருகின்றனர். மருத்துவ ரீதியிலான கோரிக்கைகள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும் என்றனர்.

அதற்கு அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தா, மருத்துவ காரணம் காட்டி ஜாமீன் கோரியதை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கின் தன்மை மற்றும் தீவிரம் காரணமாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதும் பழைய காரணங்களைக் கூறித்தான் ஜாமீன் கோருகின்றனர் என்பதால் இந்த மனுவையும் நிராகரிக்க வேண்டும் என்றார்.

அப்போது ஆர்யமாசுந்தரம், முன்னதாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்தபோது செந்தில் பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. ஆனால் அதன்பிறகு தற்போது அவருக்கு இதயத்தில் பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உரிய சிகிச்சை மற்றும் தொடர் கவனிப்புக்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (மே 16) தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE