மீனம்பாக்கம் அருகே தொழில்நுட்ப கோளாறு சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மீனம்பாக்கம் அருகே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சென்ட்ரல் - விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை தடைபட்டது. இதனால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.

சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

விரைவான, பாதுகாப்பான, வசதியான பயணம் என்பதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக காலை, மாலை வேளைகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில், விமான நிலையம் - மீனம்பாக்கம் இடையே நேற்று அதிகாலை 4.15 மணிக்கு தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்ட்ரல் - விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை நேற்று அதிகாலை 5 மணி முதல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, மீனம்பாக்கம் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், விம்கோ நகர் - விமான நிலையம் இடையேவும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையேவும் வழக்கம்போல மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. அதேநேரத்தில், சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் சென்ட்ரலில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து விம்கோ நகர் - விமான நிலையத்துக்கு இயக்கப்படும் மெட்ரோரயிலில் மாறி செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

மறு மார்க்கமாக, விமானநிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்ல ஆலந்தூரில் மாறி, மற்றொரு மெட்ரோ ரயில் மூலமாக சென்ட்ரலுக்கு வந்தனர். இதனால், பயணிகள் நேற்று காலை அலுவலக நேரங்களில் 2 மெட்ரோ ரயில்களில் மாறி செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.இதற்கிடையில், மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் நீண்ட நேரம் போராடி, தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர்.

இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை நேற்று நண்பகல் 12.15 மணி முதல் சீரானது. சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE