கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னலில் வாகன ஓட்டிகளுக்காக மேற்கூரை அமைப்பு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் சுங்கவாயிலை தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக நிழல் தரும் வகையில் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நிகழாண்டு கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். இதையடுத்து போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கடும் வெப்பத்தால் பாதிப்புக்குள்ளாகினர். சிக்னலில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருடன் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வரும் முதியவர்கள், பெண்கள் சிக்னல்களில் காத்திருக்கும் மிகுந்த சிரமமடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளை வெயில் கடுமையில் இருந்து பாதுகாக்கும் வகையில் பசுமைக் கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்திலேயே அதிகளவு வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் ஒன்றான கரூர் மாவட்டத்தில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் கரூர் சுங்கவாயிலில் உள்ள போக்குவரத்து சிக்னலில் தெரசா முனையில் இருந்து கரூர் வரும் சாலையில் சுங்கவாயில் போக்குவரத்து சிக்னலில் வாகன ஓட்டிகளுக்காக பொதுப் பணித்துறை சார்பில் கடந்த 12ம் தேதி தகரத்திலான மேற்கூரை அமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா போக்குவரத்து சிக்னலில் கோவை சாலையின் வடப்பகுதியில் தகர மேற்கூரை அமைதிக்கும் பணி நேற்று தொடங்கியது. தூண்கள், மேற்கூரை என பணிகள் தொடங்கி நடைபெற்று நேற்றிரவு முடிவுற்றது. இதையடுத்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா மேற்கூரை இன்று (மே 15) பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் கடும் வெயிலில் காத்திருக்கும் 2 சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னலில் நிழலில் நின்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு சென்றனர்.

மாநகராட்சி ஆணையர் சுதா கூறும்போது "தலைமைச் செயலர் அறிவுத்தலின் பேரில் ஆட்சியரின் உத்தரவுப்படி கரூர் மாநகராட்சி சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னலில் காத்திருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்காக நிழல் தரும் வகையில் கூரை அமைக்கப் பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE