வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் இடைக்கால தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, வடலூர் சுத்த சன்மார்க்க நிலைய அறக்கட்டளைக்கு எதிராக சேப்ளாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சுத்த சன்மார்க்க நிலையம் என்ற அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில், ‘வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் கொள்கைகளை பயிற்றுவிக்கும் நோக்கில், 73 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அறக்கட்டளை இது. இதன்மூலம் ஆரவற்றோர் இல்லங்கள், இலவச பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம்.

அறக்கட்டளை சார்பில் குருகுலம் மற்றும் சேவாஷ்ரமம் தொடங்குவதற்கு 1951-ம் ஆண்டு அரசு நிலம் ஒதுக்கியது. கூடுதல் நிலம் தேவைப்பட்டதால், அருகில் இருந்த அரசு நிலமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிலத்தின் பட்டா மாற்றம் செய்யப்படாததால் நிலத்தை தரிசு நிலம் எனக்கூறி, ஆக்கிரமிப்புக்களை அகற்றும்படி சேப்ளாநத்தம் கிராம பஞ்சாயத்து தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்யக் கோரியும், வருவாய் துறை ஆவணங்களில் மாற்றம் செய்யக் கோரியும் அளித்த விண்ணப்பம் மீது முடிவெடுக்கப்பட உள்ள நிலையில், பஞ்சாயத்து தலைவர் உள்நோக்கத்துடன் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். மேலும், பட்டா கோரிய விண்ணப்பம் மீது முடிவெடுக்கும் வரை, இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.டி.ஆஷா மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கைக்கு தடை விதித்தும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE