இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என ஆர்.டி.ஐ-ல் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற விவரம் ஆர்.டி.ஐ-ல் தெரியவந்துள்ளது. இத்துடன் சேர்த்து இதர நகரங்களுக்கு அறிவிக்கப்பட்ட 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்ற விவரமும் கிடைத்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்ட நீட்டிப்புக்கு பிறகு, 54 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு (முன்பு 118.9 கி.மீ. ஆக இருந்தது) 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு (2ஏ மற்றும் 2 பி) ரூ.14,788 கோடி நிதியும், கொச்சி மெட்ரோ ரயில் (2-ம் கட்டம்) திட்டப்பணிகளுக்கு ரூ.1,957 கோடி நிதியும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு ரூ.5,976 கோடி நிதியும், நாசிக் மெட்ரோ திட்டத்துக்கு ரூ.2,092 கோடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை, நாசிக் மெட்ரோ ரயில் திட்டங்களை தவிர, இதர 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது. அதன்படி, கொச்சி, பெங்களூரு, நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மொத்தமாக ரூ.18,978 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் கூறும்போது, ``மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்ற தகவல் ஆர்.டி.ஐ-ல் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், கொச்சி, பெங்களூரு, நாக்பூர் ஆகிய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை என்பது மிகப்பெரிய பின்னடைவாகும். எனவே, இத்திட்டத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE