கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. இருப்பினும், தட்டுப்பாடு காரணமாக பொள்ளாச்சி இளநீர் விலை ரூ.50 வரை உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரிக்கும். சென்னையில் போன்ற பல நகரங்களில் வெப்பம் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதனால் இளநீர், குளிர்பானங்கள், தர்பூசணி, கிர்னி பழம், கூழ் விற்பனை சூடுபிடித்துள்ளது. குளிர்பானங்களைவிட இயற்கை பானமான இளநீர் உடல் நலத்துக்கு சிறந்தது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், இளநீர் விற்பனை அமோகமாக நடக்கிறது. அதேநேரத்தில் பொள்ளாச்சி பகுதியில் தேங்காய் விளைச்சல் பாதியாகக் குறைந்திருப்பதால், தட்டுப்பாடு ஏற்பட்டு இளநீர் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் சுமார் 200 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட இளநீர் ரூ.50 வரை விற்கிறது.
அமைந்தகரையைச் சேர்ந்த இளநீர் வியாபாரி ராஜசேகர் கூறும்போது, “சென்னைக்கு பொள்ளாச்சி, புதுச்சேரியில் இருந்து இளநீர் லாரிகளில் எடுத்து வரப்படுகின்றன. பொள்ளாச்சி இளநீருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு வரத்து குறைவாக உள்ளது. எங்களுக்கு ரூ.34 முதல் ரூ.40 வரை விற்கின்றனர். நாங்கள் ரூ.45 மற்றும் ரூ.50-க்கு விற்கிறோம்” என்றார். சென்னை பெரம்பூர், அமைந்தகரையில் ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், ஊரப்பாக்கத்தில் ரூ.45, கிழக்கு தாம்பரத்தில் ரூ.25 முதல் ரூ.35 வரையிலும், பழவந்தாங்கல், நங்கநல்லூரில் ரூ.35 முதல் ரூ.40 வரையிலும் விற்கிறது. ரூ.25-க்கு சிறிய இளநீர் கிடைக்கிறது.
இதுகுறித்து தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத் தலைவர் டி.ஏ. கிருஷ்ண சாமி கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் தென்னை மரங்கள் இருந்தாலும் பொள்ளாச்சி பகுதியில்தான் அதிகபட்சமாக 2 கோடி தென்னை மரங்கள் இருந்தன.
ஆயிரம் முதல் 2 ஆயிரம் அடி வரை ஆழ்குழாய் கிணறு போட்டாலும் போதிய அளவு நிலத்தடி நீர் கிடைப்பதில்லை. அதனால் வறட்சியில் இருந்து தென்னை மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும், பூச்சித் தாக்குதல்களை ஒழிக்க இயற்கை மற்றும் செயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள் வைத்தாலும் மரங்களைக் காப்பாற்றுவது சிரமமாக இருக்கிறது.
தென்னையைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மழைப்பொழிவு மட்டுமே பூச்சித் தாக்குதலை நிரந்தரமாகக் கட்டுப்படுத்தும். வறட்சி மற்றும் பூச்சித் தாக்குதலால் பெரிய இளநீருக்குப் பதிலாக சிறிய அளவு இளநீரே கிடைக்கிறது.
முன்பு 600 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட இளநீர் கிடைத்தது. இப்போது குறைந்தபட்சம் 200 மில்லி லிட்டர் முதல் அதிகபட்சம் 300 மில்லி லிட்டர் அளவு கொண்ட இளநீர்தான் விளைகிறது. கடந்தாண்டு ஒரு இளநீர் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்றோம். இந்தாண்டு ரூ.40 கொடுத்தாலும் தேவையான அளவு இளநீர் சப்ளை செய்ய முடியவில்லை என்றார்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இளநீர் விலை ரூ.50-ஐ தொட்டுள்ளது. இந்த விலை மேலும் உயரும் என்று இளநீர் வியாபாரிகள் கூறுகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago