கயத்தாறு சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்து நிறுத்தம்

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி: கயத்தாறு சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாலை 6.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு 676 என்ற வழித்தடம் எண் கொண்ட அரசு பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்து இரவு சுமார் 7.35 மணிக்கு கயத்தாறு சுங்கச்சாவடியை அடைந்தது. ஆனால், அரசு பேருந்து ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி பேருந்தை சுங்கச்சாவடி ஊழியர்கள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இறங்கி சென்று சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கண்டிப்பாக ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருக்கும். நீங்கள் சரியாக பாருங்கள் என்று கூறினர்.

ஆனால், பேருந்து கணக்கில் பணம் இல்லை எனக்கூறி சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். சுமார் 20 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பணம் செலுத்தி பேருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தமாகா நகரத் தலைவர் கே.பி.ராஜகோபால் கூறுகையில், “வள்ளியூர் பனிமணையைச் சேர்ந்த இந்த அரசு பேருந்து ராமேஸ்வரம் - நாகர்கோவிலுக்கு இடையே இயங்கும் வழக்கமான பேருந்துக்கு மாற்று பேருந்தாக இயக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காலையில் புறப்பட்டு வரும்போது இந்த பேருந்தின் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருந்து உள்ளதால் பிரச்சினையின்றி சென்று விட்டனர். ஆனால் திரும்ப வரும்போது பணம் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 20 நிமிடங்கள் வரை சுங்கச்சாவடியில் நாங்கள் காத்திருந்தோம். ஒரு பேருந்தின் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருக்கு தகவல் பணிமனையைச் சேர்ந்த பணியாளர்களுக்கே தெரியவரும்.

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அதை அறிய வாய்ப்பு இல்லை. ஒரு பேருந்தை மாற்று பேருந்தாக அனுப்பும்போது, அதில் ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இருக்கிறதா? இல்லையா? என்று பார்த்து, இல்லையென்றால், அந்தப் பேருந்துக்குரிய கணக்கில் தேவையான தொகையை செலுத்தி அதன்பின் அனுப்பி இருக்கலாம். இதுபோன்ற தவறு வருங்காலங்களில் நடைபெறாத வண்ணம் பணிமனை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE