செய்தித் தெறிப்புகள் @ மே 14: பத்திரப்பதிவு கட்டண உயர்வு சர்ச்சை முதல் மோடி வேட்புமனு தாக்கல் வரை

By செய்திப்பிரிவு

வாரிசு சான்று விண்ணப்பம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு: ‘பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. உண்மை தகவல்களை மறைத்து வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் ஐந்து வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்கவேண்டும்’ என தமிழக வருவாய் நிர்வாகத் துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை, குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்களை வெளியேற்றுவது வெட்கக்கேடு” - சீமான்: “யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையோ, அதன் வாழ்விடத்தைப் பாதுகாப்பதிலோ எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், யானைகள் வாழுமிடம் மற்றும் வழித்தடம் எதுவென்பதே அறியாமல் தமிழ்நாடு வனத்துறை கூடலூர் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி அவர்களை வெளியேற்ற யானை வழித்தடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயல்வது வெட்கக்கேடானது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவு கட்டண உயர்வு: அண்ணாமலை குற்றச்சாட்டு: “மே 8, 2024 தேதியிட்ட அரசாணையின்படி, 5 ரூபாயாக இருந்த கட்டணம் 500 ரூபாயாகவும், 30 ரூபாயாக இருந்த கட்டணம் 1,000 ரூபாயாகவும் என 26 வகையான சேவைகளுக்கான பத்திரப்பதிவு கட்டண உயர்வை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு.

பத்திரப்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி, வழிகாட்டி மதிப்பையும் உயர்த்தி, உயர் நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் திமுக அரசு, இத்தனை அதிகமான கட்டணச் சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதன் பின்னணி திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, ‘தத்து ஆவணங்கள், ஒப்பந்த ஆவணங்கள், ரத்துப் பத்திரங்கள், நகல் பத்திரங்கள், குடும்ப உறுப்பினர் பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. எவ்வித நியாயமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் ஆஜர்: “திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை எண்ணி பாருங்கள்” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
அது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார், மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன்.

இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அதன்பின், வழக்கின் விசாரணையை வருகிற ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி சக்திவேல் அறிவித்தார்.

பல மாவட்டங்களில் மே 18 வரை கனமழை வாய்ப்பு: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மே 18 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமையைப் பொறுத்தவரையில் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜெகன் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி” - பிரசாந்த் கிஷோர்: “ஆந்திர சட்டசபைத் தேர்தலில் இம்முறை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 இடங்களை மட்டுமே வெல்லும். அந்தக் கட்சி தோல்வியை சந்திக்க நேரிடும். அதேநேரம், தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 106-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லலாம். மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 இடங்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைக்கும்” என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.

“மோடியின் பொய்களை அம்பலப்படுத்திய தேர்தல் இது!”: பிரதமர் மோடியை ‘பொய்யர்களின் தலைவர்’ என்று வருணித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தத் தேர்தல் நரேந்திர மோடியின் பொய்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் அதன் 70 ஆண்டு கால ஆட்சியில் உருவாக்கியவைகளை, தனது கோடீஸ்வர நண்பர்களிடம் ஒப்படைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா விமர்சித்துள்ளார்.

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்: உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்தார்.

மும்பை விளம்ப ஹோர்டிங் விபத்து பலி 14 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ராட்சத விளம்பரப் பதாகை சரிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தில் இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுஷில் குமார் மோடி காலமானார்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி காலமானார். அவருக்கு வயது 72. முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடந்தது.

காசா மோதலில் இந்தியர் உயிரிழப்பு: இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநா-வில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

பிரதமர் மோடி சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி கோடி என்றும், சொந்தமாக வீடு, கார் இல்லை என்றும் பிரதமர் மோடி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த சொத்து மதிப்பு என்பது அவரது அசையும், அசையா சொத்துகள், முதலீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

“சிஏஏ குறித்து பொய்களைப் பரப்புகிறார் மம்தா” - அமித் ஷா தாக்கு: “மம்தா பானர்ஜி சிஏஏ சட்டம் தொடர்பாக பொய்களைப் பரப்பி, மக்களை தவறாக வழிநடத்துகிறார். சிஏஏ சட்டத்தை அவரால் ஒருபோதும் தடுக்க முடியாது” என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஹெச்.டி.ரேவண்ணா ஜாமீனில் விடுதலை: பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணா, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மகனும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஹெச்.டி.ரேவண்ணா, தங்கள் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE