கோவில்பட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு - 14 பேருந்துகளுக்கு நோட்டீஸ்

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வில், குறைபாடுகள் கண்டறியப்பட்ட 14 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த ஆய்வின்போது, பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் மோட்டார் வாகன விதிகள் குறித்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழிய பாண்டியன் விளக்கினார்.

தீயணைப்புத்துறை எம்.சுந்தரராஜ் தலைமையில் குழுவினர் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய தீயணைப்பு முறைகளையும், பள்ளி குழந்தைகளை வாகனத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் செய்முறை விளக்கம் அளித்தனர். மேலும், வாகனங்களில் பாம்பு போன்ற விஷப் பூச்சிகளால் ஏற்படும் விளைவுகளை பற்றியும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் எடுத்துரைத்தனர்.

108 ஆம்புலன்ஸ் குழுவை சேர்ந்த ஆ.முத்துலட்சுமி மற்றும் ஆர்.ஜெகதீஷ்வரன் ஆகிய அடங்கிய குழுவினர் விபத்து ஏற்பட்டால் செய்யக்கூடிய முதலுதவி குறித்தும் ஓட்டுநர்களின் உடல் தகுதி பராமரிப்பு குறித்தும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழியப்பாண்டியன், வட்டாட்சியர் சரவண பெருமாள், பள்ளி கல்வி துறை துணை ஆய்வாளர் என்.கே.ரமேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.சுரேஷ் விஸ்வநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில், 216 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 14 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 202 வாகனங்கள் தகுதியானவை என சான்றிளிக்கப்பட்டது. வேறு எங்கும் இல்லாத வகையில், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் உள்ள அவசர வழியில் கதவு, சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது திறந்து குழந்தைகளுக்கு ஆபத்து நேரிடும் என்பதால், அவசர வழியில் கதவு பகுதியில் தடுப்பு கம்பிகள் பொருத்த அறிவுறுத்தப்பட்டு, அனைத்து வாகனங்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

ஆய்வுக்கு வராத 72 வாகனங்களும், குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட 14 வாகனங்களும் அலுவலக நாட்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவை என சான்று பெற்ற பின்பு தான் பொது சாலையில் வாகனங்களை இயக்க வேண்டும். அவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தாத வாகனங்கள் பொது சாலையில் இயக்கினால் வாகனம் சிறைப்பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE