பொள்ளாச்சியில் இடி, மின்னலுடன் கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 2.30 மணிக்கு திடீரென கன மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, பலத்த காற்று, இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழையால், சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. பல்லடம் சாலை, தேர்நிலை ரவுண்டானா, மரப்பேட்டை பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைகள் நிரம்பி, சாலையில் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து குளம்போல தேங்கியது. 31-வது வார்டு தன்னாசியப்பன் கோயில் வீதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

புளியம்பட்டி பகுதியில் சாலையில் வெள்ளம்போல ஓடிய மழைநீரில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதேபோல ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் கனமழை பெய்தது. கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE