அவிநாசியில் சூறாவளி காற்றுடன் மழை: 9,000 வாழைகள் முறிந்து கடும் சேதம்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழைக்கு காசிகவுண்டன்புதூர், வேலாயுதம்பாளையம், பழங்கரை, செம்பியநல்லூர், நம்பியாம்பாளையம், பாப்பான்குளம், புலிப்பார், புஞ்சைத் தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பயிரிட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் மதிப்பிலான 9 ஆயிரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

இது குறித்து தோட்டக்கலை, வருவாய் துறையினர் கூட்டாக கணக்கெடுக்கும் பணியை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், திடீரென வீசிய சூறாவளி காற்றில் வாழைகள் முற்றிலும் சேதமடைந்தது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கிவிட்டது. இந்த சம்பவம் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் பலர் காப்பீடு செய்வதில்லை. ஏற்கெனவே விவசாயம் மூலமாக சொற்ப வருவாய் கிடைக்கும் பட்சத்தில், தற்போது தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் சூறாவளி காற்று உள்ளிட்ட பேரிடரால் கடும் பாதிப்பை விவசாயிகள் சந்திக்கின்றனர்” என்றனர்.

அவிநாசியில் கோவை பிரதான சாலை சீனிவாசபுரம் அருகே இருந்த பழமையான வாகை மரம், முத்துச்செட்டிபாளையம் அண்ணமார் கோயில் அருகே இருந்த பழமையான அரச மரம் விழுந்தன. இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் அருகே இருந்த பழமையான வேப்பமரம் தெப்பத்தில் முறிந்து விழுந்தது. மேலும் விஎஸ்வி காலனி, காமராஜர் நகர், சேவூர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்களின் மீதும், மின்கம்பிகள் மீதும் விழுந்ததால் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

அவிநாசி வட்டாரப் பகுதிக்கு உட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம், தேவம்பாளையம், கொளத்துப்பாளையம், சிலுவைபுரம், பச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் உட்பட பல்வேறு துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE