அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்க கோரி வழக்கு: விலங்குகள் நல வாரியத்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

விலங்குகள் நல வாரியத்தில் உரிய சான்றிதழ் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு தமிழக மாடுகள், அடிமாடுகளாக கொண்டு செல்லப்படுவதை தடுக்கக்கோரியும் இதற்காக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்தியதேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘மிருக வதை தடைச் சட்ட விதிகளை மீறி மாடுகள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு தமிழக டிஜிபி சார்பில் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்: அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக தனிநபர்கள் அளிக்கும் புகார்கள் மீது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை போலீஸார் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். சுங்கச்சாவடிகளில் பணியில் இருக்கும் ஊழியர்கள் இதுதொடர்பாக போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்றால், விலங்குகள் நலவாரிய செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்துஉள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE