குற்றங்களை கட்டுக்குள் வைக்கும் வகையில் சென்னையில் மீண்டும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக 135 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ரவுடிகளை கணக்கெடுக்க உள்ளனர்.
தமிழகத்தில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும்போது, ரவுடிகள், பழைய குற்றவாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கண்காணிப்பது வழக்கம். கடந்த 2012-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள் இருந்தனர். இதில், தலைநகர் சென்னை முதலிடத்தை பிடித்தது. இங்கு மட்டும் 3,175 ரவுடிகள் இருந்தனர். அவ்வப்போது ரவுடிகள் மீது போலீஸார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில். 2 மாதங்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் பிரபல ரவுடி பினு, தனது கூட்டாளிகள் 100-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். நள்ளிரவில் அவர்களை சுற்றிவளைத்த போலீஸார், 116 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பினு உள்ளிட்ட ரவுடிகள் ஒருவர்பின் ஒருவராக சரணடைந்து வருகின்றனர்.
அதன்பிறகும் சென்னையில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வடபழனியில் அர்ச்சகர் மனைவி கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். வழிப்பறி, செயின் பறிப்பு, முன்விரோத மோதல்கள் உள்ளிட்ட செயல்களும் தலைதூக்க ஆரம்பித்தன.
இதையடுத்து, சென்னையில் உள்ள ரவுடிகள், தலைமறைவு ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்களின் பட்டியலை சேகரிக்க மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி உட்பட 12 காவல் மாவட்டங்களில் உள்ள 135 காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரவுடிகளின் பெயர், இருப்பிடம், குற்றச் செயல்கள், அவர்களின் கூட்டாளிகள் குறித்து மட்டுமே போலீஸார் தகவல்களை சேகரிப்பர். தற்போது ரவுடியின் பெயர், அவர் மீது உள்ள குற்ற வழக்குகள், குடும்பப் பின்னணி, அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகள் உள்ளார்களா, எத்தனை முறை சிறை சென்றுள்ளார் என்பன உள்ளிட்ட 135 கேள்விகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ரவுடிகள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர்கள் எச்.எம்.ஜெயராம் (வடக்கு), எம்.சி.சாரங்கன் (தெற்கு) ஆகியோர் கூறும்போது, ‘‘சென்னையில் குற்றங்கள் கட்டுக்குள் உள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தலைமறைவு ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சட்டம், ஒழுங்கை சிறப்பாக பேணிக்காக்க குற்றவாளிகளின் பட்டியல் சேகரிக்கப்படும். அதன்படி, தற்போதும் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago