“எவ்வளவு காலம் தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது?” - செல்வப்பெருந்தகை ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது? தமிழகத்தில் தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய செல்வப்பெருந்தகை, "1967ம் ஆண்டில் இருந்து 57 ஆண்டுகள் ஏமாந்தது போதும். தேர்தல்களின்போது தொகுதிகளை கேட்கும் நிலையில் இருந்து தொகுதிகளை பிரித்து கொடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

இன்னும் எவ்வளவு காலம் நாம் காத்திருப்பது. 57 ஆண்டுகள் நாம் அமைதி காத்திருந்தோம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இனியும் நாம் அமைதியாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஒரு நொடிகூட இனி தாமதிக்காமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

எவ்வளவு காலம் இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என கையேந்தி நிற்பது?. ஒரு காலத்தில் நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் நாம் ஏற்படுத்த வேண்டும். காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தோடு அதனை சாத்தியப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE