அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிய அனுமதியா? - தமிழக ஆளுநர் மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: “அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக ஆளுநரால், தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழக ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அதுதொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த முதல்வர் அண்ணாதுரை மற்றும் முத்துராமலிங்க தேவர் குறித்து பேசியிருந்தார். அண்ணாமலையின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறி அண்ணாமலைக்கு எதிராக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றால், அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று இதற்கான அரசு ஒப்புதல் அளித்ததாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE