“ராகுல் காந்தி உடன் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம்” - செல்வப்பெருந்தகை

By செய்திப்பிரிவு

சென்னை: “தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல் காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகூர், அஜித் பி. ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கும், ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர். இந்த கடிதம் கிடைத்தவுடனே அழைப்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி , பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என நேற்று முன்தினம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். இந்நிலையில், இதுவரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அத்தகைய விவாதத்தை நடத்துவதற்கு நரேந்திர மோடிக்கு துணிவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மடியில் கனம் இருப்பதால் ராகுல்காந்தியுடன் விவாதிக்க நரேந்திர மோடி தயாராக இல்லை.

நரேந்திர மோடியை பொறுத்தவரை முதல்வராக இருந்த 11 ஆண்டு காலத்தில் சட்டமன்றத்திலோ, பிரதமராக பதவி வகித்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்றத்திலோ எத்தகைய விவாதங்களிலும் அவர் பங்கேற்று கருத்து மோதல்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதில்லை. பிரதமர் மோடி பேசுவார், அதனை மற்ற உறுப்பினர்கள் கேட்க வேண்டும். எந்த கேள்விக்கும் நாடாளுமன்றத்தில் அவர் பதில் சொல்லியதில்லை. பிரதமர் பதவி வகித்த 10 ஆண்டு காலத்தில் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்ததில்லை. ஏனெனில் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிற துணிவை அவர் பெற்றிருக்கவில்லை. அதற்கு காரணம் அவரது அரசியல் பின்னணி தான். இந்நிலையில் இருக்கும் நரேந்திர மோடி நாள்தோறும் ராகுல்காந்தியை இளவரசர் என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டு பேசுகிறார். இந்தியாவில் மன்னராட்சியை ஒழித்த இந்திரா காந்தியின் பேரப் பிள்ளையாக இருக்கிற ராகுல்காந்தியை பார்த்து இளவரசர் என்று மோடி அழைப்பது மிகுந்த கேலிக்குரியது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல்காந்தியை பார்த்து கேள்வி கேட்கிறார். கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு 2002-ல் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா கலவரத்துக்கு காரணமானவர் என்று குற்றம்சாட்டப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மும்பையில் தங்கி, நாள்தோறும் காவல்துறையின் முன் கையெழுத்து போட்டவர் தான் அமித்ஷா. இத்தகைய பின்னணி கொண்டவர் ராகுல்காந்தியிடம் கேள்வி எழுப்ப என்ன உரிமை இருக்கிறது ? தமது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்துக்காகவும், மக்களை ஒன்றுபடுத்துவற்காகவும் இரண்டுமுறை இந்திய ஒற்றுமை பயணம் நடத்தியவர் ராகுல்காந்தி.

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மீது மதச்சாயம் பூசியவர் நரேந்திர மோடி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் என்ற ஒரு வார்த்தை எங்கேயும் இடம்பெறவில்லை. அதேபோல, நீண்ட நெடுங்காலமாக இங்கு வாழ்ந்து வருகிற சிறுபான்மையினரை ஊடுருவல்காரர்கள் என்று சொன்னவர் மோடி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவில் வாழ்ந்து வருகிற 20 கோடி இஸ்லாமியர்களுக்கு எதிராக அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி.

கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக ராணுவ வீரர்களை நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டாம். அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லுங்கள் என்று அன்று ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்தியபால் மாலிக் கூறிய அறிவுரையை புறக்கணித்தனால் 22 ராணுவ வீரர்கள் புல்வாமா தாக்குதலில் பலியானதற்கு காரணமாக இருந்தவர் யார் என்பதை இந்த நாடு அறியும். இந்த குற்றச்சாட்டை அதே ஆளுநர் மீண்டும் கூறிய போது, பிரதமர் மோடி இதுவரை அதற்கு பதில் கூறாதது ஏன் ? அந்த தாக்குதலை பயன்படுத்தி 2019 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடியதைப் போல, 2024 தேர்தலில் ராமர் கோயில் பிரச்சினையை எழுப்பி, மக்களை திசைத் திருப்பி விடலாம் என்று மோடி கனவு காண்கிறார்.

ஆனால், விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, கரோனா தொற்றினால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு, மோடியின் சலுகையினால் அதானி, அம்பானி சொத்து குவிப்பு, ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரம் இழப்பு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக நரேந்திர மோடி திரும்ப ஆட்சிக்கு வருவதற்கான கடுகளவு வாய்ப்பும் இல்லை என்று அறிவார்ந்த அரசியல் வல்லுநர்களும், பாரபட்சமற்ற தேர்தல் கணிப்பாளர்களும் நாள்தோறும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் பதற்றமும், அச்சமும் அடைந்த பிரதமர் மோடியும், பாஜகவினரும் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அச்சுறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்கிற கனவை நாளுக்கு நாள் ராகுல்காந்தி தகர்த்து வருகிறார்.

இதன்மூலம் தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய இண்டியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பின்னணியில் தான் ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்