நாகை எம்.பி. எம்.செல்வராசு மறைவு: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளர்.

முன்னதாக, இன்று (மே.13) காலை நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 67.

சிறுநீரக பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இந்நிலையில், உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், இன்று அதிகாலை காலமானார். அவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவரது உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் தனது இரங்கல் குறிப்பில், “நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

1975-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராஜ் சுமார் அரைநூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார்.

செல்வராஜ் நான்கு முறை நாகை மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களுக்கு இரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் திரு. செல்வராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் அவர்களது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

அரைக்கம்பத்தில் செங்கொடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தோழர் எம். செல்வராசு எம் பி உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, அதிகாலை 02.40 மணிக்கு காலமானார்

நாளை (14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்ந்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் கமலவதனம், மகள்கள் செல்வப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், நாகை மக்களவை உறுப்பினருமான செல்வராஜ் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்: “தோழர் எம்.செல்வராசு தனது இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். ஏழை, எளிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் பல்வேறு பிரச்சனைகளுக்காக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. அதில் தோழர் எம்.செல்வராசுவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாகை நாடாளுமன்ற தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று அத்தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்”, என்று தெரிவித்துள்ளார்

டிடிவி தினகரன்: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. செல்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE