தமிழகத்தில் 16-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு: பாம்பனில் 7 செ.மீ. மழை பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17, 18-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நாளை மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் மதுரையிலும், 15-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 16-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 7 செமீ, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, ஈரோடு மாவட்டம் தாளவாடி, கோவை மாவட்டம் மக்கினம்பட்டி ஆகிய இடங்களில் தலா 6 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சேலம், கோவை மாவட்டம் சூலூரில் தலா 5 செமீ, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழக உள் மாவட்டங்களில் 16-ம் தேதி வரை சமவெளி பகுதிகளில்106 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102 டிகிரி, கடலோர தமிழக மாவட்டங்களில் 99 டிகிரிஃபாரன்ஹீட் வெயில் பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் தேர்தலில் முக்கிய தலைவர்கள் மாலை நேரத்தில் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் இருந்தது.

கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில், கடும் வெயில் வாட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக தினமும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இதன் காரணமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வந்த நகரங்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்த நிலையில், நேற்று 6 ஆக குறைந்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஈரோடு, கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, நாமக்கல், திருத்தணி ஆகிய இடங்களில் 102 டிகிரி, திருச்சியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. வரும் 16-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE